கரோனா பராமல் இருக்க ஒன்றிணைந்த செயல்பாடே அவசியம் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளத்தில் இன்று (ஜூன் 24) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட கருத்து விவரம்:
"புதுச்சேரியில் கரோனா தொற்றால் 59 புதிய நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இதுபோன்ற பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால் நாளொன்றுக்கு புதியதாக 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளுக்கு உழைப்பது அவசியம்.
தயவு செய்து அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள். நீங்கள் கடைக்கு செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் கை, கால்களை சுத்தம் செய்யுங்கள். இந்த மூன்று முறைகளையும் பின்பற்றும்போது நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
முக்கியமாக, கிருமிநாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்துங்கள். இம்முறைகளை பின்பற்றுவதால் பாதிப்பு பரவலை தவிர்க்கலாம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நிர்வாகத்தினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களை தனிமனித இடைவெளியுடன் பணிபுரியச் செய்வது, கிருமி நாசினியை போதுமான அளவு வைத்திருப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
தயவு செய்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க கட்டாயம் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளுடன் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவோம்"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.