பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மகன் குண்டர் சட்டத்தில் கைது

பெ.பாரதி

ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த குமாரும் (45), அவரது மகன் காளிதாஸ் என்கின்ற கார்த்திக்கும் (22) அப்பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் அப்பெண் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், உடல்நலக் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்தப் பெண்ணின் சகோதரன் கொடுத்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) தமிழரசி வழக்குப் பதிந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கடந்த 11-ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தந்தை, மகன் இருவரையும் திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் அரியலூர் எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், அரியலூர் ஆட்சியர் த.ரத்னா குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க இன்று (ஜூன்.24) உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT