புதுச்சேரியில் மூடியுள்ள நியாயவிலைக்கடை: கோப்புப்படம் 
தமிழகம்

துணைநிலை ஆளுநர் முடிவால் இனி புதுச்சேரியில் ரேஷன் கடை இயங்காது?

செ.ஞானபிரகாஷ்

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புதுச்சேரியில் இதுவரை மஞ்சள் குடும்ப அட்டைகளுக்கான இலவச அரிசி விநியோகிக்கப்படாததால் பலரும் மிக பாதிப்பில் உள்ளனர். இச்சூழலில் துணைநிலை ஆளுநரின் புதிய முடிவால் இனி புதுச்சேரியில் நியாய விலைக் கடைகள் இயங்காது என்பது தெளிவாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3.36 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1.8 லட்சம் கார்டுகள் ஏழை மக்களுக்கான சிவப்பு குடும்ப கார்டுகள். அதில், 1.56 லட்சம் மஞ்சள் குடும்ப அட்டைகள். புதுச்சேரியை பொருத்தவரை மஞ்சள் குடும்ப அட்டை வைத்துள்ளோரில் பலர் ஏழைகள், பழங்குடியினரும் உண்டு.

இச்சூழலில், கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலானதால் புதுச்சேரிக்கு மத்திய அரசு 9,425 மெட்ரிக் டன் அரிசி, பருப்பு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு ரேஷன் கடை மூலமாக தராமல் அரசு ஊழியர்கள் மூலம் தரப்பட்டது.

இந்நிலையில், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி நியாயவிலைக்கடைகள் மூலம் தர புதுச்சேரி அரசு திட்டமிட்டது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து மற்றவர்களுக்கு தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்தார்.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி அரசு தனது சொந்த நிதியில் ரூ. 5.28 கோடி நிதியை ஒதுக்கியது. இச்சூழலில், அரசு ஊழியர்கள் 17 ஆயிரம் பேர் இப்பட்டியலில் தவிர்க்கப்பட்டது. ஆனால், வருமான வரி செலுத்துவோரை மஞ்சள் அட்டையில் கண்டறிய முடியவில்லை. அரசு ஊழியர்கள் தவிர்த்து மீதமுள்ளோருக்கு 15 கிலோ இலவச அரிசி தர முடிவு எடுக்கப்பட்டது.

ஊரடங்கு அமலாகி மூன்று மாதங்களான நிலையிலும் இதுவரை புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி தரப்படவில்லை. இதுதொடர்பாக, அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "இந்திய உணவு கழகத்திடம் இருந்து அரிசி வந்துள்ளது. ஓரிரு நாளில் அரிசி விநியோகம் செய்யப்படும்" என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் மாநில அரசு முடிவுபடி, நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி தரப்படாமல் மீண்டும் அதிகாரிகள் மூலமே அரிசி விநியோகம் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கிரண்பேடி: கோப்புப்படம்

இதுதொடர்பாக, நியாயவிலைக்கடை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் 507 நியாயவிலைக் கடைகளில் 800 பேர் வரை பணிபுரிகிறோம். நியாயவிலைக் கடையில் இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் தருவது அமலில் இருக்கிறது.

நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது, 32 மாதங்களாக ஊதியம் இல்லை. மத்திய அரசு தந்த அரிசியை சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு ஊழியர்கள் மூலம் தந்தனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மஞ்சள் அட்டைக்கான இலவச அரிசி நியாயவிலைக்கடை மூலம் தரப்படும் என்றனர்.

ஆனால், தற்போது நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி தராமல் இதர துறை அரசு ஊழியர்கள் மூலமே தரப்பட உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, முதல்வரை சந்தித்து பேசினோம். அப்போது அவர், நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி வழங்கலாம் என ஆளுநருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால், அவர் ஆசிரியர்கள் மூலம் அரிசி வழங்க கோப்பில் திருத்தம் செய்ததாக குறிப்பிட்டார். தற்போது பள்ளிகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி தொடங்கியுள்ளது" என்றனர்.

இதுதொடர்பாக மேலும் விசாரித்தபோது, "நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் தரப்படவில்லை. இச்சூழலில், அரசு தரப்பு கோப்பை துணைநிலை ஆளுநர் ஏற்காதது மூலம் இனி புதுச்சேரியில் நியாயவிலைக்கடைகள் இயங்காத சூழலே நிலவுகிறது" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT