நூற்பாலைகளில் நூல் சுற்றப் பயன்படும் காகித கோன் மற்றும் நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் காகித டியூப் தயாரிக்கும் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
காகித ஆலைகளில் காகிதம் சுற்றுதல், விசைத்தறித் துணிகள் சுற்றுதல், பம்ப் செட்டுகள் பேக்கிங் உள்ளிட்டவற்றிலும் காகித டியூப்கள் பயன்படுகின்றன. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோபி, ராஜபாளையம், திண்டுக்கல், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 சிறு, குறு தொழிற்சாலைகளில் இவை தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு தேசியக் குழு உறுப்பினர் கே.எஸ்.பாலமுருகன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "காகித கோன் மற்றும் டியூப் உற்பத்தித் தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். தினமும் சுமார் 60 லட்சம் காகித கோன்களும், 275 டன் காகித டியூப்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் இத்தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மிகப் பெரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நூற்பாலைகளிலும், இதர தொழில்களிலும் இவற்றின் தேவை பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. இதனால், உற்பத்தியும் 50 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், முக்கிய மூலப்பொருளான 'கிராப்ட் போர்டு' மற்றும் 'மில் போர்டு' ஆகியவற்றின் விலை டன்னுக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை உயர்ந்துவிட்டது. அதேசமயம், இவற்றைப் பயன்படுத்தும் நூற்பாலை உரிமையாளர்கள், தற்போதைய நெருக்கடியைக் காரணம் காட்டி, காகித கோன் விலையைக் குறைக்குமாறு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த அசாதாரணமான சூழலால், பல தொழிற்சாலைகள் மூடப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.
காகித கோன் உற்பத்தியாளர் சங்கச் செயலர் கே.குப்புசாமி கூறும்போது, "ஊரடங்குக்கு முன் நூற்பாலைகளுக்கு விற்பனை செய்த பொருட்களுக்கான பணமும் இன்னும் வரவில்லை. இதனால், வங்கிக் கடன் மீதான வட்டியைக் கூட கட்ட முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர். எனவே, நெருக்கடியில் தவிக்கும் இத்தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
வரியைச் செலுத்த முடியாமல் தவிக்கும் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்களிக்க வேண்டும். வங்கிக் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நடைமுறை மூலதனக் கடன்களை நிபந்தனையின்றி வழங்குவதுடன், வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" என்றார்.