விழுப்புரத்தில் திமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். 
தமிழகம்

விழுப்புரம் அருகே மணல் அள்ளுவதை நிறுத்தாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம்; பொன்முடி அறிவிப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதை நிறுத்தாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே தி.புதுப்பாளையம் மற்றும் அண்டராயனூர் கிராமத்தில் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு, மணல் அள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன. இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்று (ஜூன் 23) வருவாய்த்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட சமாதானக்கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மணல் அள்ளும் பணி தொடங்கியது. இதனைக் கண்டித்து இன்று (ஜூன்24) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபாகரிடம் திமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் பொன்முடி மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தென்பெண்ணையாற்றில் மணல் எடுக்க 2018-ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது. இது நீதிமன்றம் மூலம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரசு மணல் அள்ள முயற்சி மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்று நேரத்தில் இப்பணியை மேற்கொண்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. தற்போது மணல் கொள்ளைக்கு அரசு வழிவகை செய்துள்ளது. 300க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் உள்ளனர். எம்.சாண்ட் மணலைப் பயன்படுத்தாமல் இப்போது மணல் குவாரியைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எனவே, உடனே மணல் அள்ளும் பணியை நிறுத்தாவிட்டால், விரைவில் அனைத்துக் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT