ஈரானில் புலம் பெயர் தொழிலாளர்களாக இருக்கும் தமிழக மீனவர்கள் 500 பேரை மீட்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி சுனாமி காலனியைச் சேர்ந்த ராயர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரான் துறைமுகத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை கரோனா நோய்த்தொற்று காலத்தில் சொந்த மாநிலத்துக்கு அனுப்ப மறுக்கின்றனர்.
தற்போது உணவு, குடிதண்ணீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகள் செய்து தராமல் படகுகளுக்கு உள்ளேயே தங்கியிருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்களை தொலைபேசி மூலமாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ தொடர்பு கொள்ள முடியவில்லை. சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் இயக்கி மத்திய அரசு அழைத்து வந்தது போல், ஈரானில் உள்ள 500 தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விசாரணைக்குப் பின்னர், இந்த மனு விசாரணைக்கு தகுதியானது இல்லை.
எனவே மனுதாரர் கோரியுள்ள நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.