கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்தது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் தடுக்க போலீஸாருக்கு தமிழக அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை, அதன் வீடியோ பதிவுகளை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சந்தைப்பகுதியில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு நேரத்தில் குறிப்பிட்ட நேரம் கடந்து கடையை திறந்து வைத்திருந்ததாக இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக இன்று விசாரித்தது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் ஆகியோர் டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி இருவரும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்றதால், அவருக்கு பதிலாக தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தூத்துக்குடி எஸ்பி அருண்பாலகோபாலன் ஆகியோர் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது ஐஜி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணஷ், ரகுகணேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தூத்துக்குடி எஸ்பி கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நீதித்துறை நடுவர் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதற்காக அரசு காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை மற்றும் இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, அதன் வீடியோ பதிவு ஆகியவற்றை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் நிலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் அளிக்கக்கூடாது.
மேலும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருப்பதையும், உரிய நீதி வழங்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.