புதுச்சேரியில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 24) புதிதாக 59 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 461 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 276 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று 441 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 59 பேருக்குத் தொற்று இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் 12 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 46 பேர் ஜிப்மரிலும், ஒருவர் மாஹே பிராந்தியத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு உடையவர்கள். 14 பேர் முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்துடன் தொடர்பு உடையவர்கள். 18 பேர் எப்படி தொற்றால் பாதிக்கப்பட்டார்கள், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று விசாரித்து வருகிறோம். ஒருவர் பிம்ஸ் மருத்துவமனையிலிருந்து வந்துள்ளார். சென்னையிலிருந்து மாஹே பிராந்தியத்துக்கு வந்த ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் இதுவரை 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 173 பேர், ஜிப்மரில் 89 பேர், காரைக்காலில் 11 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் (கடலூர்) ஒருவர் என மொத்தம் 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13 ஆயிரத்து 435 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 835 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளன. 174 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன.
தற்போது பரிசோதனையை அதிகரித்துள்ளோம். எல்லா மருத்துவக் கல்லூரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். அறிகுறி இல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கோவிட் கேர் சென்டரைக் கண்டறிந்து மாற்ற முடிவு செய்தோம்.
இது தொடர்பாக அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரியுடன் அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரண்டு கல்லூரிகளிலும் தலா 50 பேரை மாற்ற உள்ளோம். மேலும், புதுச்சேரி பல் மருத்துவக் கல்லூரியில் 25 பேரை மாற்றவுள்ளோம். இதன் மூலம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் பளு குறையும்.
மேலும், பரிசோதனை செய்தவர்களில் 'நெகட்டிவ்' இருப்பவர்களை உடனடியாக அனுப்பி விடுவோம். 'பாசிட்டிவ்' வருபவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறிந்து அழைத்து வருவோம். இதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடப் பற்றாக்குறைக் பிரச்சினையைக் குறைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.