திண்டிவனம் அருகே பிறந்தநாள் விழாவுக்கு இ-பாஸ் இல்லாமல் சென்று திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் வந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
90 நாட்களாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், கடப்பேரியில் உள்ள தனது பேரனின் பிறந்தநாள் விழாவை கொண்டாட திண்டிவனம் அருகே கீழ் எடையாளம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தன் உறவினர்களுடன் நேற்று (ஜூன் 23) 4 வேன்களில் சென்றுள்ளார். பின்னர், நேற்று இரவு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
திண்டிவனம் அருகே ஓங்கூர் சோதனைச்சாவடியில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை சோதனை மேற்கொண்ட போலீஸார், அடுத்தடுத்து 4 வேன்கள் வருவதை அறிந்து சோதனை மேற்கொண்டபோது, இ-பாஸ் இல்லாமல் வருவது தெரியவந்தது.
இதனையடுத்து, வேன்களை பறிமுதல் செய்து, வேனில் வந்த 58 பேரை திண்டிவனம் அருகே தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தினர். மேலும், 4 வேன்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சிலரை தேடிவருகின்றனர். இது குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.