கல்லணையில் இருந்து திறக்கப் பட்ட 8-வது நாளில் காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு நேற்று வந்து சேர்ந்த தண்ணீரை மலர் தூவி விவசாயிகள் வர வேற்றனர்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த 12-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கடந்த 16-ம் தேதி கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கல்லணையில் திறக்கப்பட்ட 8-வது நாளில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு காவிரி நீர் நேற்று வந்தடைந்தது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் இருகரம் கூப்பி வணங்கி, மலர் தூவி வரவேற்றனர்.
இங்கு காவிரி நீர் தேக்கி வைக் கப்பட்டு பாசன ஆறுகளுக்கும், கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் பின்னர் திறக்கப்படும். எஞ்சிய தண்ணீர் பூம்புகாரில் கடலில் கலக்கும்.
காவிரி ஆற்றின் கடைசி கதவ ணைக்கு தண்ணீர் வந்த டைந்தது குறித்து விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் கூறிய தாவது:
கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி அறவே நடைபெறவில்லை. சம்பா சாகுபடியும் பலன் தர வேண்டிய காலகட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்பட்டுவிடும். இதனால் விவசாயிகள் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமில்லை. 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டு குறித்த தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு நாகை மாவட்டத்தில் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடி சிறப்பாக இருக்கும். மகசூலில் விவசாயிகள் புதிய சாதனை நிகழ்த்துவார்கள்.
நடப்பாண்டு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விட்ட அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதுடன், சம்பா சாகுபடிக்கான உழவு மானியத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.