தமிழகம்

அத்திக்கடவு - அவிநாசி உள்ளிட்ட திட்டப் பணிகளை பார்வையிட கோவை, திருச்சிக்கு முதல்வர் பயணம்: கரோனா தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்கிறார்

செய்திப்பிரிவு

அத்திக்கடவு - அவிநாசி திட்டம், முக்கொம்பு கதவணை பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி கோவை மற்றும் திருச்சிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் குடிமராமத்து பணிகள், இதர கட்டுமானப் பணிகளை அரசு அனுமதித்துள்ளது. குறிப்பாக கோவையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மற்றும் திருச்சியில் முக்கொம்பு கதவணை திட்டம் போன்ற திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்யஉள்ளார். இதற்காக இன்று மாலை அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை செல்கிறார். நாளை (ஜூன் 25) காலை 10 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.

மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.1,532 கோடி மதிப்பில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட அத்திக்கடவு- அவிநாசி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, அதன்பின் திட்டப் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்கிறார்.

பின்னர், திருச்சி செல்லும் முதல்வர், ஜூன் 26-ம் தேதி திருச்சி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்புவில் கதவணைகட்டும் பணிகளை ஆய்வு செய்கிறார். காவிரி ஆற்றின் குறுக்கில் முக்கொம்பு பகுதியில் ரூ.387 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை நேரில் கள ஆய்வு செய்கிறார்.

முன்னேற்பாடுகள் தீவிரம்

முதல்வர் கோவை மற்றும் திருச்சி செல்லும் நிலையில், ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகள், கள ஆய்வின்போது அங்கு வரும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனாதொற்று ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக இடைவெளியுடன்பார்வையிடல் உள்ளிட்டவற்றுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஆய்வு மற்றும் பார்வையிடல் நிகழ்வுகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT