கரோனாவை ஒழிக்க அரசு எதையுமே செய்யவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை கூறி வருவதாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்கனாமலைக்கு செல்ல சரியான சாலை வசதியில்லாமல் மலைவாழ் மக்கள் கடந்த 72 ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்நிலையில், கரோனா நிவாரண பொருட்களை வழங்க வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலைப்பாதை வழியாக நடந்தே சென்று கரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.
அப்போது, நெக்கனாமலைக்கு சாலை வசதி விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். இதற்கிடையே, மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த முயற்சியில் மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல தற்காலிக சாலையை (மண்சாலை) அமைத்தனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த மண் சாலை அமைக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.
இதைதொடர்ந்து, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் வாகனங்கள் மூலம் இன்று (ஜூன் 23) காலை நெக்கனாமலைக்கு சென்றனர்.
அவர்களை மலைவாழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, 72 ஆண்டுகளாக கண்ட கனவு நிறைவேறியுள்ளதாக கூறி மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர். பிறகு, அரசு சார்பில் நெக்கனாமலையில் வசித்து வரும் 150 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப்பொருட்களாக 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, கோதுமை, மைதா உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர்கள் வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, "நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் நெக்கனாமலைக்கு சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் தங்களது சொந்த முயற்சியில் தற்காலிக சாலையை அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. விரைவில் இங்கு தார்ச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
கரோனா தடுப்புப்பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 74 மையங்களில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இது தெரியாமல் கரோனாவை ஒழிக்க அரசு எதையுமே செய்யவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. கரோனாவை முன்னிறுத்தி மக்களிடம் அவர் குழப்பதை ஏற்படுத்த பார்க்கிறார். தமிழக மக்கள் அவரது பேச்சை நம்ப தயாராக இல்லை" என்றார்.