கோவை மாநகரில், அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று உறுதியானவர்களுக்கு பிரத்யேக இடத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது, அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் என இரு தரப்பினருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாநகரில் வசித்து, அறிகுறியே இல்லாமல் தொற்று உறுதி செய்யப்படுபவர்களை மட்டும் தனியாக வைத்து பராமரித்து சிகிச்சை அளிக்க ‘கோவிட் கேர் சென்டர்’ என்ற பிரத்யேக மையத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் மாநகரில் ஏற்படுத்த உள்ளனர்.
தனியார் கல்லூரி வளாகத்தில் இம்மையம் ஏற்படுத்தப்படும் எனவும், ஒரு சில நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது. இந்த மையத்தில் குறைந்தபட்சம் 250 படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவப் பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள மண்டலத்துக்கு ஒன்று என 5 மண்டலங்களுக்கு 5 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவர், மருத்துவக் கண்காணிப்பாளர், மருந்தாளர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்டோர் ஒவ்வொரு குழுவிலும் இருப்பர். இக்குழுவினர் தொற்று அதிகம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 23) முதல் முகாம் நடத்தி வருகின்றனர்.
மாநகரில் இன்று மதியம் நிலவரப்படி 2,992 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேரூர் சாலை தெலுங்குபாளையத்தில் தம்பதியருக்கு இன்று காலை தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள 7 குடியிருப்புகளும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இங்கு வசிப்பவர்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பரிசோதனையை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மேற்கொள்கின்றனர். தவிர, தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த நபர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் பணிபுரியும் வங்கியில் உடன் பணிபுரிந்தவர்களுக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொற்று உறுதி செய்யப்பட்ட தம்பதியர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், போத்தனூரில் தம்பதியர் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்தப் பகுதியையும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
கோவை மாநகரில் இன்றைய நிலவரப்படி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த செல்வபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம், நல்லாம்பாளையம் விஜயா நகர், சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர், ராஜ வீதி, பெரிய கடைவீதி, ஜிஆர்டி ஜூவல்லரி, கிராஸ்கட் சாலை 3 மற்றும் 4-வது வீதிகள், தெலுங்குபாளையத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம், பீளமேடு பாரதி காலனி சாலை கோபால் நாயுடு பள்ளி அருகே உள்ள பகுதி ஆகியவை மாநகராட்சி நிர்வாகத்தினரால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.