தூத்துக்குடியில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், சிறைத்துறையின் ஏடிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தாங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் பேருந்து நிலையம் அருகில் மரக்கடை நடத்தி வருகிறார். அருகில் அவரது மகன் பெனிக்ஸ், செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 19 ம் தேதி அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், கடையை அடைக்கும்படியும், அங்கு கூட்டமாக நின்றிருந்தவர்களை கலைந்து செல்லும்படியும் கூறியுள்ளனர்.
இதில், ஜெயராஜுக்கும், காவல் துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயராஜை போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஜெயராஜி்ன் மகன் பெனிக்ஸ் காவல் நிலையம் சென்று தந்தையை விடுவிக்கக் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, போலீசார், இவர்கள் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்துள்ளனர். காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் மரணமடைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,க்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு டிஜிபி-யும் இதுதொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகளுடன் விரிவான அறிக்கையை 8 வாரத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.