பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திருச்சியில் கரோனா தொற்றால் முதியவர்கள் இருவர் உயிரிழப்பு; மக்கள் அச்சம்

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் உயிரிழந்தனர். இதனிடையே, திருச்சி மாநகரப் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஜூன் 17-ம் தேதியும், திருவெறும்பூரைச் சேர்ந்த 68 வயதான முதியவர் ஜூன் 20-ம் தேதியும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள அதிதீவிர சுவாசத்தொற்று சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்தநிலையில், இன்று (ஜூன் 23) அதிகாலை மருங்காபுரியைச் சேர்ந்த முதியவரும், இன்று காலை திருவெறும்பூரைச் சேர்ந்த முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரது உடல்களும் வீடுகளுக்கு அனுப்பப்படாமல் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஓயாமாரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன.

ஏற்கெனவே 6 பேர் உயிரிழப்பு

சென்னையிலிருந்து திருச்சி வந்து தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 58 வயதான முதியவர் மே 24-ம் தேதி உயிரிழந்தார்.

திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்தவர்களில் ஜூன் 1-ம் தேதி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டியும், ஜூன் 7-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான முதியவரும், ஜூன் 18-ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயது முதியவரும், ஜூன் 21-ம் தேதி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவரும் உயிரிழந்தனர். இதேபோல், திருச்சி தனியார் மருத்துவமனையில் திருவெறும்பூரில் மளிகைக் கடை நடத்தி வந்த 60 வயது முதியவர் ஜூன் 21-ம் தேதி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பெருகி வரும் தொற்றாளர்கள் எண்ணிக்கை

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் மாநகரப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஜூன் 22-ம் தேதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 310. இதில் திருச்சி மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 200.

குறிப்பாக, ஜூன் 22-ம் தேதி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 52 பேரில் 27 பேரும், ஜூன் 21-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில் 28 பேரும், ஜூன் 20-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 24 பேரில் 19 பேரும், ஜூன் 19-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் 9 பேரும் திருச்சி மாநகரைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு நாளுக்கு நாள் திருச்சி மாநகரில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மாநகர மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT