ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனி தண்டனைச் சட்டம் தேவை என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த 12.07.2015 அன்று நடந்த கவுசல்யா - சங்கர் சாதி மறுப்பு திருமணம் செய்த பிறகு, 13.3.2016 அன்று பட்டப்பகலில் உடுமலை கடை வீதியில் கூலிப்படையினரால் கவுசல்யாவும், அவரது கணவர் சங்கரும் கூலிப் படையினரால் கொடும் ஆயுதங்களால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக் காயமடைந்த கவுசல்யா சிகிச்சை பெற்று குணமடைந்தார். சங்கர் படுகொலை வழக்கு திருப்பூர் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று, அந்த வழக்கில் கூலிப் படையை ஏவியவர்கள் அவரது பெற்றோரும், உறவினரும் என்பதாக அந்த மாவட்ட நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
6 பேருக்கு தூக்குத் தண்டனை
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக் குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரை திருப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி, 6 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்ய இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திருப்பூர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
இதேபோல், தண்டனை பெற்ற அனைவரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர்.
பல மாதங்கள் நடைபெற்ற இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு!
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று (ஜூன் 22) தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
'இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால், கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாவட்டக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்.
கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி மீது இந்த வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இதனால், அவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறோம். அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம்.
ஸ்டீபன் தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. இதனால் ஸ்டீபன் தன்ராஜூக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையையும், மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரத்து செய்கிறோம்.
அதேநேரம், ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கின்றோம். இவர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்'
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
தனி ஒரு சட்டம் - காவல்துறையில் தனி பிரிவு
மேல்முறையீட்டிலாவது இந்த ஆணவக் கொலைக்கு எதிராக உரிய நீதி கிடைக்க வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க, கூலிப்படை கொலைகளை ஒழிக்க, தனி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; காவல் துறையில் ஒரு தனிப்பிரிவை உருவாக்க வலியுறுத்தப்பட்டதையெல்லாம் தமிழக அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறது.
இந்த வழக்கில் தீர்ப்புகளைப் படித்துப் பார்த்த பிறகு, தமிழக அரசு இந்த வழக்கை அதன் சார்பில் ஆஜரானவர்களும், காவல்துறையும் சரிவர நடத்தி, தண்டனையை உறுதி செய்யும் வகையில் வழக்கை நடத்தாததுதான் இத்தீர்ப்பு இப்படி அமைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது என்பது சட்டம் பயின்ற நம்மைப் போன்றவர்களுக்குப் புரிய வந்தது; இந்திய குற்றவியல் சட்டம், கொலையை நீதிபதிகளே நேரில் பார்த்தால்கூட, அதை வைத்து தீர்ப்பு எழுதி தண்டனை தந்துவிட முடியாதே, சட்டச் சாட்சியங்களை வைத்துத்தான் தீர்ப்பு எழுதிட முடியும்.
தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கை, தொடக்கத்திலிருந்தே நடத்திடும் முறை, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்தாக வேண்டும், இனியும் தூண்டுபவர்களோ, கூலிப் படையினரோ மீண்டும் இதுபோல கூலிக்காக கொலையில் ஈடுபடும் இழிதன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்திடாமல், மேல்முறையீட்டிலும் அதுவே பெரிதும் பிரதிபலித்தது என்பது, வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் வாசகங்களிலிருந்தும், உள்ளடக்கத்திலிருந்தும் தெளிவாகப் புரிகிறது.
குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி, தண்டனை வாங்கித் தந்தால்...
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டிலாவது இந்தக் குறைகளுக்கு இடமளிக்காமல், குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி, தண்டனை வாங்கித் தந்தால், அது நீதியைக் காப்பாற்றியதாக இருக்கும்; அதனால், இதுபோன்ற அவப்பெயர் அரசுக்கும், காவல் துறைக்கும் ஏற்பட்டுள்ளதைத் துடைத்தெறிய வழி ஏற்படும்.
எனவே,
1. உடனடியாக மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் தேவை.
2. ஆணவக் கொலைக்கு எதிராகத் தனி தண்டனைச் சட்டம் தேவை.
3. ஆணவப்படுகொலை விஷயத்தில் தனிப் பிரிவு தமிழகக் காவல்துறையில் தேவை! உடனே ஏற்பாடு செய்வது அவசர அவசியமாகும்"
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.