தமிழகம்

கரோனா சமயத்தில் திடீரென தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகம் காரைக்குடிக்கு மாற்றம்: சர்ச்சையில் கல்வித்துறை

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா சமயத்தில் திடீரென தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தை காரைக்குடிக்கு மாற்றம் செய்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை வருவாய் மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலகம் 6-வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கரோனா பரிசோதனைக்காக 6-வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளியை சுகாதாரத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அங்கு செயல்பட்டு வந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தை தேவகோட்டையில் வேறு பகுதிக்கு மாற்றாமல், திடீரென காரைக்குடிக்கு கல்வித்துறை அதிகாரிகள் மாற்றினர். இது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சிலர் கூறியதாவது: தேவகோட்டையில் 16-வது வார்டு நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் உள்ளன. மேலும் தற்போது பள்ளியும் இயங்கவில்லை. இதனால் அங்கு மாவட்ட கல்வி அலுவலகத்தை நடத்தலாம்.

ஆனால் மாவட்டக் கல்வி அலுவலர் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும் மேலும் பெரும்பாலான ஊழியர்கள் காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு வந்து செல்வதாலும் அவர்கள் வசதிக்காக அலுவலகத்தையே காரைக்குடிக்கு மாற்றிவிட்டனர். இது கண்டிக்கத்தக்கது, என்று கூறினர்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், ‘ காரைக்குடிக்கு மாற்றியது தற்காலிகம் தான். மாவட்ட ஆட்சியர் மூலம் தேவகோட்டையில் 6-வது வார்டு பள்ளியில் செயல்படும் கரோனா பரிசோதனை மையத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலகத்தை அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT