தமிழகம்

குமரியில் வேகமாகப் பரவிவரும் கரோனா: அரசு மருத்துவர், கர்ப்பிணி உட்பட மேலும் 9 பேருக்கு தொற்று

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுசீந்திரத்தை அடுத்த மருங்கூரை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்தபோது கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மருத்துவர் ஆசாரிபள்ளம் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்த செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் 12 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவரின் உறவினர்கள்,, உடன் பணியாற்றியவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் முளகுமூட்டை சேர்ந்த 32 வயது செவிலியர் ஒருவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி விட்டு ஊர் திரும்பியுள்ளார். கர்ப்பிணியான அவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆசாரிபள்ளம் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குமரியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 214 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 9 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுளளதால் குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 223 பேராக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT