பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிகளுக்காக 3,000-க்கும் அதிமான பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
மருத்துவமனை தூய்மைப் பணி, உள் நோயாளிகள் கவனிப்பு, கரோனா நோய் தொற்று சிசிச்சைப் பிரிவு, பரிசோதனை பிரிவு என பல நிலைகளில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கான ஊதியம் மாதந்தோறும் முறையாக வழங்கப்படுவதில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக தினக்கூலி பணியாளர்கள் நிலையிலேயே வைத்திருப்பது சட்ட அத்துமீறலாகும். இந்தத் துயர நிலைக்கு தீர்வு காண வருகிற ஜூன் 25 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவதாக பணியாளர்கள் அறிவித்துள்ளதை அரசு அறியும் என நம்புகிறோம்.
முக்கியத்துவம் வாய்ந்த பணியில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.