தமிழகம்

பாஸ்போர்ட் பெற `ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பம்: தாலுகா அலுவலக ‘இ-சேவை’ மையங்களில் தமிழகம் முழுவதும் விரைவில் தொடக்கம்

ப.முரளிதரன்

பாஸ்போர்ட் பெற `ஆன்-லைன்’ மூலம் குறைந்தக் கட்டணத்தில் விண்ணப்பிக் கும் சேவை தமிழகம் முழுவதிலும் தாலுகா அலுவலகங்களில் உள்ள `இ-சேவை’ மையங்களில் அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை மேற்கொள்ளப் படுகிறது.

பல்வேறு தேவைகளுக்காக வெளி நாடுகளுக்கு செல்பவர்களுக்கு பாஸ் போர்ட் வழங்குவதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.

சென்னை மண்டலத்தில் அமைந்த கரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இதேபோல மற்ற மண்டலங்களிலும் சேவை மையங் கள் உள்ளன. பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் முதலில் `ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து பின்னர் இந்த சேவை மையங்களுக்கு சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

பாஸ்போர்ட் பெற சிலருக்கு `ஆன்- லைன்’மூலம் சரியாக விண்ணப் பிக்கத் தெரிவதில்லை. இதை சாதக மாகப் பயன்படுத்தி தனியார் இன்டர் நெட் மையங்களில் சிலர் ரூ.300 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கின்ற னர். எனவே, பொதுமக்களுக்கு இச்சேவையை குறைந்த கட்டணத்தில் அளிப்பதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ் போர்ட் அலுவலகத்தில் பொது சேவை மையம் இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு, கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.100-ம், பண மாக செலுத்துபவர்களுக்கு ரூ.155-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் உள்ள `இ-சேவை’ மையங்களில் இப்புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் `தி இந்து’ விடம் கூறியதாவது:

பாஸ்போர்ட் பெற `ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும்போது விண் ணப்பதாரர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் தலைமை அலுவலகத் தில் பொது சேவை மையம் இரு மாதங் களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், இச்சேவையை பெற வெளியூர்களில் இருந்து வந்து செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

தமிழகத்தில் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள `இ-சேவை’ மையங்கள் மூலம் இச்சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை அளிக்கப்பட உள்ளது. அடுத்த வாரம் முதல் இச்சேவை தொடங்கப்படும். இதன் மூலம், குறைந்த கட்டணத்தில் இச்சேவையை பொதுமக்கள் தங்கள் ஊரிலேயே பெற முடியும்.

இவ்வாறு கே.பாலமுருகன் கூறினார்.

SCROLL FOR NEXT