பேருந்துகளில் கூடுதல் பயணிகளை ஏற்றினால் போக்குவரத்து ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோன நோய் தடுப்பு குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், எஸ்.பி. ஜெயக்குமார், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சண்முக கனி, துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்கேஸ்ட்ரோ, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, டிஎஸ்பி நல்லசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை பேசியதாவது:
"விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 606 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 391 பேர் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 1,200 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதில் 20, 30 பேருக்குபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக, விழுப்புரம் நகரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், விழுப்புரம் நகரத்திற்கு தினசரி வெளிமாவட்டத்திலிருந்து புதியவர்கள் வந்துசெல்கிறார்கள். தினமும் இரண்டு ரயில்கள் வருகின்றன. இதனால் பயணிகள் நடமாட்டம் நகரத்தில் அதிகரித்துள்ளது. மேலும், மற்ற வணிக நிறுவனங்கள் இருப்பதால் நகரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை கவனத்தில்கொண்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் இம்மருத்துவமனையும் உள்ளது. இதனால், விழுப்புரம் நகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வட்டாட்சியர், காவல்துறை, மருத்துவத்துறையினர் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டு ஊரடங்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒரே கிராமம், வார்டு பகுதியில் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி நோய்த்தடுப்புப் பகுதியாக அறிவித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து யாரும் வெளியே செல்லவோ, உள்ளே நுழையவோ தடை விதிக்கவும், தடுப்புக்கட்டைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம்கள் நடத்தி, கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும். அரசுப் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். இல்லையென்றால், ஆய்வின்போது சிக்கும் நடத்துநர், ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பொது இடத்தில் எச்சில் துப்புபவர்கள் மீதும் தகுதந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களும் அரசு விதித்துள்ள ஊரடங்கை கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.