உதகை மார்க்கெட்டில் இன்று அதிகாலை எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட சுமார் 1,500 கடைகள் நகரின் மையப் பகுதியில் உள்ளன. நேற்று மாலை முதலே உதகையில் காற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 23) அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் மார்க்கெட் நடுப்பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி அளவில் அங்கிருந்த தேநீர் கடையில் இருந்து எரிவாயு சிலிண்டர் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உதகை நகர் பகுதியில் உள்ள மக்கள் மார்க்கெட்க்கு வரத்தொடங்கினர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், காற்றின் தாக்கம் சற்று வேகமாக இருந்ததால் 20-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.
விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, நகராட்சி ஆணையர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் மார்க்கெட்டை ஆய்வு செய்தனர்.
எரிந்த கடைகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு, உரிமைதாரர்களிடம் ஒப்படைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.