கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை நங்கநல்லூர் பகுதியில் மிரட்சியுடன் பார்க்கும் சிறுமிக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் மாநகராட்சி ஊழியர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் 2,600 பேருக்கு கரோனா தொற்று கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி நடத்தும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் இதுவரை 2,600 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல்பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்முகாம்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 8-ம் தேதி முதல்மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஜூன் 20-ம் தேதி வரை மொத்தம் 44 நாட்களில் 5 ஆயிரத்து 418 முகாம்கள் நடத்தப்பட்டன. அவற்றில் மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருந்த 9 ஆயிரத்து 69 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 6,567 பேருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இவர்களில் 40 சதவீதம் (சுமார் 2 ஆயிரத்து 600) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்கள் பலருக்கு கரோனா வைரஸை பரப்ப இருந்தது தடுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆலோசனை மையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநகராட்சி நடத்தி வரும் மருத்துவ முகாம்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

வீடுவீடாக சோதனை

மாநகராட்சி சார்பில் வீடுவீடாக நடத்தப்பட்ட சோதனையில், முதியோர், இதய நோய், நீரிழிவு, சிறுநீரக கோளாறுஉள்ளவர்கள் என 3 லட்சத்து47 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க தொண்டு நிறுவனங்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார செவிலியர்கள் மூலம் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT