தமிழகம்

மதுரையில் ஒரே நாளில் 153 பேருக்கு கரோனா: முகக்கவசத்தையும், அக சுத்தத்தையும் மறவாதீர்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் இன்று ஒரே நாளில் 153 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த 2 வாரமாக கரோனா தொற்று வேகமும், அதன் வீரியமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உயிரிழப்பும் சத்தமில்லாமல் உயர்ந்து வருகிறது.

ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்திலும், சில நாட்கள் தொடர்ந்து தொற்று இல்லாமலும் மதுரை ‘கரோனா’ நிலவரம் காணப்பட்டது. நோய்ப் பரவல் கட்டுக்குள்ளாகவே இருந்ததால் ஊரடங்கு தளர்த்தப்பட்டப்பிறகு மக்கள் மிகச் சாதாரணமாக பொதுவெளிகளில் முகக்கவசம் கூட இல்லாமல் நடமாடத் தொடங்கினர்.

முன்போல் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவது, வீட்டிற்கு சென்றால் குழிப்பது போன்றவற்றை கூட ஒழுங்காக கடைபிடிக்கவில்லை.

இதற்கிடையில் மகாராஷ்டிரா, சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமலும், போலி இ-பாஸ் பெற்றும் மதுரைக்குள் நுழைந்தனர். இவர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டால் இவர்களால் மற்றவர்களுக்கு இந்த தொற்று நோய் பரவியது.

அதன் பரவலும், மற்ற எந்த நோய்களும் இல்லாத ஆரோக்கியமுடன் காணப்பட்ட இளம் வயதினரும் உயிரிழக்கும் அளவிற்கும் இந்த நோயின் புதிய வீரியமும் தெரிய வந்தது.

அதனால், கடந்த 9-ம் தேதி முதல் ‘கரோனா’ தொற்று வேகம் அதிகரித்தொடங்கியது. 19ம் தேதி 16 பேரும், 10ம் தேதி 10 பேரும், 11ம் தேதி 19 பேரும், 12-ம் தேதி 33 பேரும், 13-ம் தேதி 15 பேரும், 14-ம் தேதி 16 பேரும், 15-ம் தேதி 33 பேரும், 16-ம் தேதி 20 பேரும், 17-ம் தேதி 27 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 19-ம் தேதி ‘திடீர்’ உச்சமாக 68 பேருக்கும், 20-ம் தேதி 90 பேருக்கும், 21-ம் தேதி 68 பேருக்கும் இந்தத் தொற்று நோய் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மதுரையில் 153 பேருக்கு ‘கரோனா’ தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது.

பரிசோதனை அதிகரிப்பாலே தற்போது தொற்று அதிகமாக கண்டறிவதற்கான காரணமாக சொல்லப்பட்டாலும் இந்த தொற்றுநோய் மதுரையில் சென்னையைப்போல் சமூக பரவலாகவிட்டதே முக்கியக் காரணம்.

தற்போது இந்த தொற்று நோய் நோயாளிகளுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்களுக்கு அதிகமாக கண்டறியப்படுகிறது. அதனால், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே இந்த நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அலட்சம் காட்டால் உயிர்க் கவசமான முககவசத்தை பொறுப்புடன் அணிய வேண்டும். அப்போதுதான் நாம் மட்டுமில்லாது நம் குடும்ப உறுப்பினர்களை இந்த நோயில் இருந்து பாதுகாக்க முடியும்.

SCROLL FOR NEXT