சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித அனுமதியும் பெறாமல் கூட்டம் கூட்டமாகத் தொற்றுடன் வருபவர்கள் தங்களை அறியாமலேயே, மற்ற இடங்களில் இருப்பவர்களுக்கும் கரோனா தொற்றைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், சரக்கு லாரிகள் மூலமாகவும், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் எவ்வித அனுமதியும் பெறாமலேயே பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வந்து சேர்ந்து விட்டார்கள்.
முறைப்படி இ- பாஸ் பெற்று வருபவர்களால் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகம் இல்லை. இப்படி அனுமதி பெற்று வருபவர்கள் மாவட்ட எல்லையில் முறைப்படி சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். ஆனால், அனுமதியின்றிக் குறுக்கு வழிகளில் புகுந்து வருகிறவர்கள் போலீஸ், மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட யாரிடமும் உண்மையைச் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள். அதனால்தான் சிக்கலே.
இப்படிச் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியபோது உண்மையை மறைத்துக் கூறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடுமை காட்டியிருக்கிறது நாகை மாவட்டக் காவல் துறை. சென்னை தியாகராய நகரில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்க்கும் 9 பேர் கடந்த 12-ம் தேதி, ஒரே வாகனத்தில் சீர்காழி அருகேயுள்ள தங்களது சொந்த ஊரான வெட்டாத்தங்கரை கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்களை நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியில், போலீஸார் மடக்கிச் சோதனை செய்தபோது, தாங்கள் சென்னையில் இருந்து வரும் விவரத்தைச் சொல்லாமல் விருத்தாசலத்தில் நடந்த ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்புவதாகப் பொய் சொல்லி இருக்கிறார்கள். இதை உண்மை என நம்பி போலீஸாரும் அவர்களை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தி கையில் சீல் வைத்து அனுப்பி இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் சென்னையில் இருந்து வந்த விஷயம் தெரிந்ததுமே சொந்த கிராமத்து மக்கள், சுகாதாரத் துறையினருக்கு உடனே தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த 9 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ததில் அதில் 7 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பொய்யான தகவல் கூறி நோய்த் தொற்று பரவக் காரணமாக இருந்ததாக அந்த 9 பேர் மீதும் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி வழக்குப் பதிவு செய்வதோடு விட்டுவிடாமல் சென்னையில் மக்கள் வெளியே சுற்றாமல் இருக்கக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது போல சென்னையில் இருந்து வந்து தகவல் கூறாமல் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.