நீலகிரி மாவட்டத்துக்குள் சட்டவிரோதமாக உள்ளே நுழைய முயன்ற 10 பேர் மீது, பிரிவு 269 மற்றும் 270 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே வாரத்தில் 30 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மலை மாவட்டமான நீலகிரிக்குள் நுழைய மாநில, மாவட்ட எல்லைகள் என 16 வழிகள் உள்ளன. இந்தச் சோதனைச்சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 சோதனைச்சாவடிகள் இருந்தாலும், பர்லியார் மற்றும் குஞ்சப்பனை வழியாகவே அதிக அளவு வாகனங்கள் உள்ளே நுழைகின்றன. பொதுமுடக்கத் தளர்வுக்குப் பிறகு போக்குவரத்து மேலும் அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநபர்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வர கடுமையான தடை உள்ளபோதும், பலரும் இ-பாஸ் எதுவும் இல்லாமல் சட்டவிரோதமாக உள்ளே நுழைகின்றனர். மேலும், உரிய காரணங்கள் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டும் வந்தன.
தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, அதிரடியாக வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன.
வழக்குப்பதிவு குறித்து காவல்துறையினர் கூறும் போது, "அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிரக் கண்காணிப்புகள் மேற்கொண்டு வருகிறோம். பர்லியார் மற்றும் குஞ்சப்பனை வழியாகவே ஒரு நாளைக்கு சுமார் 800 வாகனங்கள் வருகின்றன.
உரிய அனுமதியோ, ஆவணமோ இல்லாமல் சுற்றுலா நோக்கத்தோடு வரும் நபர்கள்மீது வழக்குப் பதிவு செய்து வருகிறோம். மேலும், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்கிறோம். சட்டவிரோதமாக உள்ளே நுழைய முயன்ற 10 பேர் மீது பிரிவு 269 மற்றும் 270 (உயிருக்கு ஆபத்தான நோயைப் பிறருக்கு பரப்பும் நடவடிக்கை) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்து, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.
சுற்றுலா நோக்கத்தோடு அல்லது சட்டவிரோதமாக நீலகிரி மாவட்டத்துக்கு யார் வந்தாலும் தொற்று நோய்ப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்" என்றனர்.