கோவையில் வாயில் புண்ணுடன் சிகிச்சை பெற்று வந்த 10 வயது ஆண் யானை உயிரிழந்தது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜம்பு கண்டி வனப்பகுதி அருகே சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, சோர்வான நிலையில் வாயில் காயத்துடன் நின்று கொண்டிருப்பதாக கடந்த 20-ம் தேதி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர், கால்நடை மருத்துவர் உதவியுடன் யானைக்குத் தேவையான வலி நிவாரணி, எதிர்ப்பு சக்தி மருந்துகளை பலாப்பழம் மற்றும் வாழைப்பழம் மூலமாக வழங்கினர். தொடர்ந்து, யானைக்குத் தேவையான தீவனம் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
முதலில், வாயில் குச்சி ஏதேனும் இடித்துப் புண் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் யானை சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
இந்நிலையில், யானை நேற்று (ஜூன் 21) முடியாமல் படுத்துவிட்டது. அப்போது யானையின் இடது வாய் மேல் பகுதியில் 9 செ.மீ ஆழத்துக்குக் காயம் ஏற்பட்டு, புண் ஆனதால் சரியாகச் சாப்பிட முடியாமல் உடல்நலன் குன்றியது தெரியவந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த யானை, இன்று (ஜூன் 22) காலை உயிரிழந்தது.
பின்னர், பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, அந்தப் பகுதியிலேயே யானை குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. இரண்டு ஆண் யானைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டை அல்லது விளையாட்டின்போது ஏற்பட்ட காயம் காரணமாக யானை உயிரிழந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.