கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் வறுமை காரணமாக பெண் குழந்தையை ஆற்றில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணையாற்றில் நேற்று (ஜூன் 21) மாலை குழந்தையின் அழுகுரல் கேட்டு, அப்பகுதி வழியே சென்றவர்கள், ஆற்றில் இறங்கிப் பார்த்தபோது, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது. இதையடுத்து, அவர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில், திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையை மீட்டனர்.
விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மங்களம் கிராமத்தைச் சேர்ந்த முத்து - தீபா தம்பதியினரின் குழந்தை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, இருவருக்கும் ஏற்கெனவே 8 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன் சித்தூருக்குப் பணிக்குச் சென்ற தீபாவுக்கு கடந்த 15-ம் தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பின்னர், அங்கிருந்து திருக்கோவிலூரை அடுத்த மிலாரிப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வறுமை காரணமாக பெண் குழந்தையை வளர்க்க முடியாத நிலையில், தீபா திருக்கோவிலூர் வந்ததும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை ஆற்றில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தீபாவுக்கு அறிவுரை வழங்கிய போலீஸார், அவரிடம் குழந்தையைக் கொடுத்து, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.