தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்காசியில் 241 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 15 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். இவர்கள் கடங்கனேரி, சாம்பவர்வடகரை, வீரசிகாமணி, வாடியூர், கீழக்கடையம், முதலியார்பட்டி, செட்டிக்குறிச்சி, வாசுதேவநல்லூர், அதிசயபுரம், கிளாங்காடு, வேதம்புதூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இது தவிர, மற்ற 15 பேரும் தென்காசி மாவட்ட பகுதிகளில் ஏற்கெனவே கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இவர்களில் தேவிப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர், தென்காசியைச் சேர்ந்தவர்கள் 4 பேர், மேலகரத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர் ஆவர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 8687 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.