தமிழகம்

‘இந்து தமிழ் திசை’யின் ‘நலமாய் வாழ’ நிகழ்வு தொடங்கியது: நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் யோகா- யோகாசனக் கலை வல்லுநர் டிகேஎஸ் சேகர் தகவல்

செய்திப்பிரிவு

உடலுக்கு மட்டுமின்றி, மன நலம், மன அமைதி, மன நிறைவுக்கான சக்தியையும் யோகா தருகிறது. யோகாசனப் பயிற்சிகளை முறையாகப் பயின்று, தொடர்ந்து செய்தால் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘நலமாய் வாழ’ நிகழ்ச்சியில் யோகா கலை வல்லுநர் டிகேஎஸ் சேகர் தெரிவித்தார்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா, ஆயுர்வேதா, மர்மா தெரபி ஆகியவற்றின் பயன்களை அறிந்து, அதன் வழியாக நமது உடல் மற்றும் மன நலனைப் பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘நலமாய் வாழ’ எனும் இணைய வழி ஆலோசனை நிகழ்ச்சியை 4 நாட்கள் நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில், யோகா கலை பற்றிய ஆலோசனையுடன் முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. சாய்ராம் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கியது.

இதில் யோகா வல்லுநர் பேராசிரியர், டாக்டர் டிகேஎஸ் சேகர் பேசியதாவது:

இன்றைய நவீன அறிவியல் உலகில் இயந்திரங்களின் வேகமான செயல்பாடுகளால் உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்டது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதுபோல, நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்வை நம்மால்வாழ முடியும். உடலுக்கு மட்டுமின்றி, மன நலம், மன அமைதி,மன நிறைவுக்கான சக்தியையும் தரும் கலையே யோகா.

இயற்கை சக்திகளான பஞ்ச பூதங்கள் மனித உடலிலும் இருக்கின்றன. முறையான பயிற்சிகள் மூலமாக இவற்றை நாம் கட்டுக்குள் வைக்க முடியும்.

உடம்பு, உயிர் இரண்டும் சேர்ந்ததே உடல். இந்த இரண்டைப் பற்றியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் சித்தர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தனர். மனித உடம்பின் அன்றாட செயல்பாடுகளே உலக அதிசயம் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

மனித உடம்புக்கு ஏற்படும்சிரமத்தை அதுவே சரிசெய்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளது. உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை மூச்சுப் பயிற்சி வழங்குகிறது. சிறு வயதில் இருந்தே யோகப் பயிற்சிகளை செய்வது சிறப்பு.இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு நவீன யோகா முறைகள் ஏராளமாக உள்ளன. யோகாசனப் பயிற்சிகளை முறையாக பயின்று, தொடர்ந்து செய்துவந்தால் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான வாழ்வையும் அனைவரும் பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று மர்மா தெரபி

‘நலமாய் வாழ’ நிகழ்ச்சியின் 2-ம் நாளான இன்று மர்மா தெரபி பற்றி டாக்டர் டி.ஆர்.தர்மேஷ் குபேந்திரன் விளக்க உள்ளார். மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதும் கிடையாது. விருப்பம் உள்ள அனைவரும் https://connect.hindutamil.in/NalamaaiVaazhe.php என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT