தமிழகம்

திருச்சியில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி; இருவர் உயிரிழப்பு

ஜெ.ஞானசேகர்

கரோனா தொற்றுடன் திருச்சியில் இரு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த முதியவர்கள் 2 பேர் இன்று உயிரிழந்தனர். இதனிடையே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் நேற்று வரை 230 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், ஏற்கெனவே 162 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தநிலையில், இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், இரு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த முதியவர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கரோனா தொற்றுடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், திருவெறும்பூர் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த 60 வயது முதியவர், கரோனா தொற்றுடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கெனவே 4 பேர் உயிரிழப்பு

சென்னையிலிருந்து திருச்சி வந்து தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 58 வயதான முதியவர் மே 25-ம் தேதியும், திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி ஜூன் 1-ம் தேதியும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான முதியவர் ஜூன் 7-ம் தேதியும், திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஜூன் 18-ம் தேதியும் உயிரிழந்த நிலையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT