சிவகங்கை மாவட்டத்தில் 5 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.58,840 செலவழிக்கப்பட்டுள்ளது. கரோனா சமயத்தில் ஊராட்சி நிதியை வீணாக்கி முறைகேடு செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
ஊராட்சிக்கு மாநில நிதிக்குழு மானியம் ஒதுக்காததால் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் கரோனா தடுப்பு பணியான கிருமிநாசினி தெளிக்க முடியாமல் ஊராட்சிகள் திணறி வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சி அலுவலகங்கள், 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இதை திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரு அலுவலகத்தில் 5 சிசிடிவி கேமராக்களை பொருத்த ரூ.58,840-க்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதில் 5 சிசிடிவி கேமராக்கள், வீடியோ ரெக்கார்டர், ‘24 இன்ச் எல்இடி டிவி உள்ளன.
இதேபோல் 457 அலுவலகங்களில் தலா 4 சிசிவிடி கேமராக்கள் பொருத்த ரூ.2.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கரோனாவை தடுக்க முடியாமல் அரசு தடுமாறி வருகிறது. பலர் வேலையிழந்து உணவிற்கே சிரமப்படுகின்றனர். இந்த சமயத்தில் ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமரா வாங்கியுள்ளனர்.
4 சிசிடிவி கேமராக்கள், டிவி அனைத்தும் சேர்த்தாலே ரூ.20 ஆயிரத்தை தாண்டாது. ஆனால் ரூ.59 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் விட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் முறைகேடு நடந்துள்ளது. லஞ்சஒழிப்பு போலீஸார் விசாரிக்க வேண்டும், என்று கூறினார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயநாதன் கூறுகையில், ‘‘விதிமுறைப்படி தான் ஒப்பந்தம் கொடுத்தோம். விலை குறித்து விசாரிக்கப்படும். தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் வழங்கப்படாது,’’ என்று கூறினார்.