விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன் 2 மகன்களுடன் சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்துவந்தார். அவரின் மூத்த மகன் கரோனா தொற்றால் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உயிரிழந்தார்.
பின்னர் தன் மற்றொரு மகனுடன் விழுப்புரம் வந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மகனுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது மற்றொரு மகன் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டியும் இன்று காலை உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, ''கரோனா தொற்று இருந்து சிகிச்சைக்குப் பின் மூதாட்டிக்கு 'நெகட்டிவ் ரிசல்ட்' வந்தது. பிறகு அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்'' என்றனர்.
இறப்புக்கான காரணம் என்னவென்று மருத்துவமனை நிர்வாகம் இன்னமும் வெளியிடவில்லை. ஒரு மாதத்திற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது விழுப்புரம் மாவட்ட மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.