இந்தோனேசியா நாட்டில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு 'எம்.வி. பல்க் கேரினா' என்ற கப்பல் கடந்த 15-ம் தேதி தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்தது.
இந்தக் கப்பலில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயது மாலுமிக்கு கரோனா தொற்று கடந்த 18-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்தக் கப்பலில் மேலும் 18 மாலுமிகள் உள்ளனர். அவர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கப்பல் துறைமுகத்துக்கு வெளியே கப்பல்கள் நங்கூரமிடப்படும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த 18 மாலுமிகளுக்கும் நேற்று சளி மற்றும் ரத்த மாதிரிகளே எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 3 மாலுமிகளுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவலர்களுக்கு தொற்று:
இதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு பாதுகாப்பில் இருந்த காவலருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சக காவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவில் பணியாற்றும் 27 வயதான காவலர் ஓருவர், கடந்த 35 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டில் பாதுகாப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததையடுத்து சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் வசித்து வந்த 3-வது மைல் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டது.
மேலும், குடியிருப்பு வளாகம் முழுவதும் மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதேபோல் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருவது சக காவலர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.