கரோனா நோய்த் தொற்று நேரத்தில் ரயில்வே வாரியத்தின் நிதித்துறை இயக்குநர், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்இ டம் பெற்றிருப்பதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக டிஆர்இயூ மதுரை கோட்டச்செயலர் சங்கர நாராயணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
ரயில்வே வாரிய நிதித்துறை இயக்குநரின் அறிக்கையில், லாப கரமாக இயக்க முடியாத கிளை ரயில் பாதைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு அமலாக்கப்பட்டால் சரக்கு ரயில்கள் ஓடாத ரயில் பாதைகளை மூடும் பாயம் உள்ளது.
உதாரணமாக நெல்லை செங்கோட்டை, செங்கோட்டை- கொல்லம், மானாமதுரை- ராமேசுவரம், மானாமதுரை – விருதுநகர் மற்றும் புதிதாக போடும் மதுரை- போடி ரயில் பாதைகளை மூட வாய்ப்பு ஏற்படும்.
கிராமப்புற, சிறு நகரங்களை இணைக்கும் ரயில் பாதைகளை மூடினால் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு ரயில் பயணம் மறுக்கப்படும். பெரும்பாலும் பெரிய நகரங்களுக்கு வந்து செல்லும் வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவர்.
ரயில்வே தேர்வாணயத்தில் புதிய தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தற்போது ரயில்வே துறையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. கரோனா காலத்தில் ஏற்கெனவே வேலையின்றி திண்டாடும் சூழலில், இந்த அறிவிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களின் எதிர்காலத்தை மேலும், பாதிக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.