கரோனா ஊரடங்கு காலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தண்ணீரை சிக்கணமாகப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக பரப்பில் சாகுபடி செய்யவும் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க தமிழகத்திற்கு ரூ.1428 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கரோனா ஊரடங்கிலும் மத்திய அரசு காட்டியுள்ள இந்த தாராளம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 12 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். மதுரை மாவட்டத்தில் 29,500 ஹெக்கரில் சாகுபடி செய்கின்றனர்.
தேசிய அளவில் தமிழகத்தில்தான் அதிகளவு பழங்கள், காய்கறிகள், மருத்துவப் பயிர்கள், தானியப்பயிர்கள் அதிகளவு பயிரிட்டாலும் விவசாயிகள், சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க முன்வரவில்லை. கோடை காலமான தற்போது நிலத்தடிநீர் ஆதாரமும், மழைப்பொழிவும் குறைந்து விவசாயிகள் பயிர்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் பாசனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கரோனா ஊரடங்கால் கூலி ஆட்கள் பற்றாக்குறை, விளைவித்த விளைப்பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் தொடரும் சிக்கல், அடிமாட்டு விலைக்கு விளைப்பொருட்களை கேட்கும் வியாபாரிகள் போன்றவற்றால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதனால், விவசாயிகள் அடுத்தடுத்து சாகுபடி பணிகளில் ஆர்வம் காட்டுவதற்கு தயக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்ய இந்த ‘கரோனா’ ஊரடங்கிலும் பிரதம மந்திரி வேளாண் நீர்ப் பாசன திட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக அளவில் ரூ.2 லட்சம் ஹெக்டரில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயித்து அதற்கு ரூ.1,428.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டு நீர்ப் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்(பொ) எஸ்.கலைச்செல்வன் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
அதற்காக மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.45.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசன திட்டத்தால் குறைந்தளவு நீரில் அதிகளவு பரப்பில் சாகுபடி செய்யலாம்.
பயிர்கள் சீராக வளரும். பயிருக்கத் தேவையான உரத்தை சிந்தாமல் சிதறாமல் தேவையான இடைவெளியில் பிரித்து வழங்கலாம். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இதுபோல் சொட்டு நீர்ப் பாசனத்தில் ஏராளமான நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிர்களை அடங்கிலில் பதிவு செய்து குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நில வரைப்படம், சிறு, குறு விவசாயிகளாக இருந்தால் வட்டாச்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்றுவட்டார தோட்டக்கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ’’ என்றார்.