மதுரையில் கரோனா நோய்த் தொற்று குறித்து முதல்வர் தினமும் நலம் விசாரிக்கிறார். நிலமைக்கேற்ப ஊரடங்கை அவர் அறிவிப்பார் என, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மதுரை நகர் காவல் நிலையங்களுக்கு தனியார் அமைப்புகள் சார்பில், தானியங்கி சானிடைசர் இயந்திரங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்கெனவே வழங்கினார்.
இதைத்தொடர்ந்து 'அம்மா சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில், மாவட்டத்திலுள்ள 50 காவல் நிலையங்களுக்கும் சானிடைசர் தானியங்கி இயந்திரங்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் டிரஸ்ட் செயலர் உ.பிரியதர்ஷினி ஆகியோர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்னிடம் வழங்கினர். ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தெரிகிறது.
அப்படி வருவோரை சோதனைச் சாவடிகளில் தீவிரமாகக் கண்காணித்து பின்னர் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தளர்வுகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வந்து செல்லும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தானாக இயங்கும் சானிடைசர் இயந்திரங்களைப் பொருத்த உள்ளோம்.
வரும்முன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற அடிப்படையில் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இதற்காக மதுரை நகரில் 27, புறநகர் காவல் நிலையங்களுக்கு 50 தானியங்கி சுத்திக்கரிப்பான் (சானிடைசர்) இயந்திரங்களை வழங்கியுள்ளோம்.
நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், திருமங்கலத்தில் மதியம் 2 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என நேரக் கட்டுப்பாடு விதித்து செயல்படுத்த வர்த்தக சங்கத்தினர் முன்வந்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அது போல அனைத்து வர்த்தக சங்கத்தினரிடமும் ஆலோசித்து, மாநகரப் பகுதியிலும் நேரக் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்று நிலைமை குறித்து தினமும் முதல்வர் தொடர்ந்து கேட்கிறார். நிலைமைக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதல்வர் தான்அறிவிப்பார். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உணவு தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் எவ்வித பாரபட்சமும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.