வடசென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தென் சென்னை, வட சென்னை என இருந்தபோது அதன் வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் எல்.பலராமன். தற்போது திமுக தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்தார். துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டபோதும், அன்பழகன் போட்டியிட்டபோதும் சிறப்பாகச் செயலாற்றியவர்.
வைகோ திமுகவிலிருந்து பிரிந்தபோது வடசென்னையில் பெரும் பாதிப்பு கட்சிக்குள் ஏற்பட்டது. அப்போது மாவட்டச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி தலைமையின் பாராட்டைப் பெற்றவர். இந்நிலையில் பலராமனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:
''வடசென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் கோவிட்-19 நோய்த் தொற்றால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவின் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. அவர் கட்சியின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர்- போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்திற்கு நிற்கும் தைரியசாலி.
கட்சித் தலைவராக இருந்து நம்மையெல்லாம் வளர்த்த கலைஞரும், கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனும் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றி - ஒரு இயக்கத்தின் தலைவரையும், பொதுச்செயலாளரையும் தேர்தலில் வெற்றி பெற பணியாற்றும் பெருமையைப் பெற்ற கட்சி முன்னணி நிர்வாகியாக விளங்கியவர்.
கலைஞர் மீது மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டும் அவரை- ஏன், ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தோடும்- கட்சிக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவரை இன்றைக்கு கட்சி இழந்து நிற்கிறது. அவர் மறைந்தாலும்- அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.