தமிழகம் முழுவதும் மண் குவாரிகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. மேலும் குவாரிகள் குறித்து உளவுத்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் செயல்படும் அரசு குவாரி களை தவிர, மற்ற இடங்களில் மணல் குவாரிகளுக்கு தடை உள்ளது. இதனால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து 6 யூனிட் கொண்ட ஒரு லோடு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை பயன்படுத்தி சிலர் விதிமுறைகளை மீறி, ஆற்று படுகைகள், ஓடைகள், கண்மாய் பகுதிகளில் மணல் அள்ளி கடத்தி வந்தனர்.
மேலும் ஆற்று படுகைகள், ஓடைகள், கண்மாயையொட்டிய பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் 3 அடிக்கு கீழே மணல் கிடைக்கிறது. இதையடுத்து சிலர் சவடு மண், உவர் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று தனியார் நிலங்களில் மணல் அள்ளி கடத்தி வந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வந்தன. பல இடங்களில் விதிமுறை மீறி 20 அடிக்கு கீழே மணல் அள்ளப்பட்டன. சில இடங்களில் மட்டும் கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டன. இதையடுத்து விதிமுறை மீறிய குவாரிகளை மூட அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமிக்கு புகார் மனு அனுப்பினார். அதேபோல், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தித்தொடர்பாளர் அருள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு புகார் அனுப்பினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அனைத்து குவாரிகளையும் மூட போலீஸார் உத்தரவிட்டனர். சில இடங்களில் வழக்குகளும் பதியப்பட்டன. மேலும் குவாரிகள் குறித்த விவரங்களையும் உளவுத் துறை போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.