தமிழகம்

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய பேரலில் சீன மொழியில் எழுதப்பட்ட பொட்டலங்களில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்: போலீஸார் கைப்பற்றி தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று இரும்பு பேரல் ஒன்று கரை ஒதுங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் மீன்வளத் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் வந்து அந்த பேரலை உடைத்து பார்த்தபோது, அதில் சீனமொழியில் எழுதப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொட்டலங்கள் இருந்தன. அவற்றின் கீழே தேநீர் பொட்டலங்கள் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே வெண்மையான படிகாரம் போன்ற பொருள் இருந்தது. இதனால் அது போதைப் பொருளாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அந்த பொட்டலங்களை போலீஸார் ஆய்வகத்துக்கு அனுப்பினர். இந்த ஆய்வின் முடிவில் அவை ‘மெத்தாம்பிடமைன்’ வகையைச் சேர்ந்த மிகவும் சக்தி வாய்ந்த போதைப் பொருள் என்பது தெரியவந்தது. மொத்தம் 78 கிலோ எடை கொண்ட இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் வந்தனர். எனவே, சுற்றுலாப் பயணிகள் போர்வையில் தமிழகத்தில் ஊடுருவியுள்ள போதைப் பொருள் கும்பலின் கைவரிசையாக இது இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டீ தூள் போன்று இவை வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளன. இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து சீனப் பொருட்களின் மீதான கண்காணிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, இதை கடலில் போட்டு அதன் வழியாக கடத்த முயன்றிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து கடலோர காவல் படை போலீஸார், மாமல்லபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT