ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கில் புதிய தொழில் மேம்பாட்டுக்காக ரூ.13.97 கோடிக்கான நிதியுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் ரூ.13.97 கோடியில் புதிய தொழில்களை மேம்படுத்த கோவிட்-19சிறப்பு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் உள்ள 207 கிராம ஊராட்சிகளில் 12 ஆயிரத்து 779 பயனாளிகள் பயன்பெறுவார்கள். இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.ரவி (அரக்கோணம்), ஜி.சம்பத் (சோளிங்கர்) உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்துகொள்ளாமல் அவர்களின் வீட்டுக்கு சென்று ரகசியமாக தங்கிவிடுவதால் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே, சென்னையில் இருந்து ஊர் திரும்புபவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என்றார்.