கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பில் குறிச்சி குளத்தைச் சீரமைக்கும் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (ஜூன் 20) தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, "மொத்தம் 334.92 ஏக்கர் பரப்பு கொண்ட இக்குளத்தின் கொள்ளளவு 50 மில்லியன் கனஅடி ஆகும். மொத்த நீர்பிடிப்புப் பகுதி 12.30 சதுர கி.மீ. சீரமைப்புத் திட்டத்தில் 5.50 கி.மீ. நீளத்துக்கு மிதிவண்டிப் பாதை, 5.50 கி.மீ. நடைபாதை, நான்கு இடங்களில் அலங்கார வளைவுகள், 47 சிற்றுண்டிகள் மற்றும் கடைகள், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடங்கள், சிந்தடிக் விளையாட்டுத் திடல், பூங்காக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதிகள், இருக்கைகள், பெயர்ப் பலகைகள், அலங்கார விளக்குகள், இரு பசுமை சமுதாயக் கூடங்கள், பார்வையாளர் மாடங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன" என்றார்.
தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல்
இதையடுத்து கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமயில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, "வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியவர்கள் மூலம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானம் மூலம் வந்த 10 ஆயிரத்து 929 பயணிகளில் 63 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்து 380 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 17 ஆயிரத்து 938 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொது வெளிகளில் வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு அபாரதம் விதிக்கப்படும். இதேபோல, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.