பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றுவது, 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல துயரமானது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:
"இந்திய ரயில்வே வாரியம் நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் பயணிகள் ரயில்களில் 500-க்கும் மேற்பட்ட ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எந்தக் காரணம் கொண்டும் 200 கிலோ மீட்டர் தூரத்தைத் தாண்டிச் செல்லும் ரயில்களை பயணிகள் ரயில்களாக அனுமதிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும், தெற்கு ரயில்வே நிர்வாகத்திலும் இயங்கி வரும் 40 பயணிகள் ரயில்கள், உடனடியாக விரைவு ரயில்களாக மாறும் எனத் தெரியவருகிறது.
இந்திய ரயில்வே வாரியத்தின் உத்தரவு மக்கள் உணர்வுகளையும், அனுபவங்களையும் பற்றி ஒரு துளியும் கவலைப்படவில்லை.
தற்போது கேரள மாநிலம் பாலக்காடு முதல் திருச்சி வரையிலும், ஈரோடு முதல் திருநெல்வேலி வரையிலும் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் இனிமேல் விரைவு ரயில்களாக மாறும். இதனைத் தொடர்ந்து இந்த ரயில்கள் நின்று, செல்லும் இடங்கள் குறைக்கப்படும். கட்டணங்கள் 5 அல்லது 6 மடங்கு வரை அதிகரிக்கும். தினசரி வேலைக்குச் சென்று, திரும்பும் தொழிலாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்கள், சுய வேலை செய்து வரும் சிறு வியாபாரிகள், உழைக்கும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்கவே திணறி வரும்போது, பயணிகள் ரயில் பயண வாய்ப்பைப் பறிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல துயரமானது.
கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசு, இப்போது பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற முயல்வதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவைத் திரும்பப் பெற மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.