சேலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட ஏழு சிறுவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனோ தொற்றுப் பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பித்த நிலையில், சிறுவர்கள் வீட்டு மாடியில் நின்று பட்டம் விடுவது, வீதி, காலி மனைகளில் கிரிக்கெட் விளையாடுவது என பொழுதைக் கழித்து வந்துள்ளனர். சேலம், தாதகாப்பட்டி ஜவகர்நகரில் உள்ள காலிப் பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர்.
தினமும் 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஏழு சிறுவர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகினர். சிறுவர்களின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செய்த சோதனையில், ஏழு பேருக்கும் கரோனா தொற்று பரவியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு தனிப் பிரிவில் ஏழு சிறுவர்கள் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது சம்பந்தமாக சிறுவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த சிறுவனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதால், தொற்று பரவியிருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னையைச் சேர்ந்த சிறுவனைக் கண்டறிந்து, அவருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்திட முடிவு செய்துள்ளனர்.