உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசும் வசந்தகுமார் எம்.பி. 
தமிழகம்

குமரி-கேரள எல்லையில் இ-பாஸ் பெற அலைக்கழிப்பு: தனிமனித இடைவெளியின்றி காங்கிரஸார் உண்ணாவிரதம்; வசந்தகுமார் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் கைது

எல்.மோகன்

குமரி, கேரள எல்லையான களியக்காவிளையில் இ-பாஸ் கிடைக்காமல் பயணிகள் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தனிமனித இடைவெளியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக வசந்தகுமார் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் உட்பட 141 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் போலீஸார், மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வருவோருக்கு மாவட்டத்திற்குள் அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் இ-பாஸ் இன்றி திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருவோரை அலைக்கழிப்பது, திருப்பி அனுப்புவது போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்தும், பயணிகளை விரைவாக அனுப்புவதற்கு முறையாக தீர்வு காணக்கோரியும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று (ஜூன் 20) களியக்காவிளை சந்திப்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்திற்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். வசந்தகுமார் எம்.பி. உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் பிரின்ஸ், விஜயதாரணி மற்றும் திரளான காங்கிரஸார் கலந்துகொண்டனர். கரோனா தடுப்பு விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் தனிமனித இடைவெளியின்றி உண்ணாவிரதம் நடத்தக்கூடாது என தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் காங்கிரஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்ததால் வசந்தகுமார் எம்.பி., எம்எல்ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார் உட்பட 141 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்

SCROLL FOR NEXT