பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்வு  

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 20) புதிதாக 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 338 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 200 ஆகவும் உயர்ந்துள்ளது. 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் இன்று (ஜூன் 20) கூறும்போது, "புதுச்சேரியில் இன்று 52 பேருக்கு கரோனா இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 83 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 28 பேருக்கும், ஜிப்மரில் 222 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், காரைக்காலில் 69 பேரைப் பரிசோதனை செய்ததில் 2 பேருக்கும் 'பாசிட்டிவ்' வந்துள்ளது. இதில் 38 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 12 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், காரைக்காலில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட நபர்களில் 11 பேர் ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

16 பேர் முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். 18 பேர் யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தமிழகத்தில் இருந்து 3 பேர் வந்துள்ளனர். காரைக்காலில் பரிசோதனை செய்த 69 பேரில் 35 பேர் சென்னையிலிருந்து வந்தவர்கள்.

சென்னையிலிருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 338 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 161 பேர், ஜிப்மரில் 31 பேர், காரைக்காலில் 8 பேர் என மொத்தம் 200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் 4 பேர் என 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் யாருக்கும் பாதிப்பில்லை.

புதுச்சேரியில் இதுவரை 11 ஆயிரத்து 992 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 486 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 206 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. சனி, ஞாயிறுகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை மிகவும் குறைக்க வேண்டும்.

தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம். இது தீவிரமாகவும், வேகமாகவும் பரவக் கூடிய நோய். வயது வித்தியாசமின்றி தாக்குகிறது. 3 மாதக் குழந்தைகளில் இருந்து 80 வயது முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நபர் வெளியே சென்று வருவதால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கரோனா தொற்று பாதிக்கிறது.

எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. புதுச்சேரி அரசு எடுத்து வந்த கடுமையான நடவடிக்கைகளால் இவ்வளவு நாள் கரோனா தொற்று குறைவாக இருந்தது. ஆனால், பொது முடக்கத்துக்குப் பிறகு கடந்த 20 நாட்களில் ஒற்றை இலக்கத்திலிருந்து 300-ஐக் கடந்துவிட்டது. எனவே, மக்கள் மிகவும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இன்று பாதிக்கப்பட்ட 52 பேரில், 58 வயதுடைய புதுச்சேரி வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT