தமிழகம்

முதல்வர் பழனிசாமிக்குக் கரோனா வராது; வந்தாலும் உடனே போய்விடும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமிக்குக் கரோனா வராது. வந்தாலும் உடனே போய்விடும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களிலேயே மதுரையில் கரோனா பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர், 'நீங்க கரோனா டெஸ்ட் எடுத்துவிட்டீர்களா தம்பி?' என்று என்னை முதலில் கேட்டார். 'எடுக்கவில்லை என்றால் உடனடியாக எடுங்கள்' என்றும் கூறினார்.

சக அமைச்சர்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் மீது அன்பாக உள்ள முதல்வரையும் துணை முதல்வரையும் நாம் பெற்றிருக்கிறோம். உங்கள் எல்லோரின் நல்லாசியால் அவருக்குக் கரோனா வராது. வந்தாலும் உடனடியாகக் காலியாகி விடும்'' என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

SCROLL FOR NEXT