சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மின்கட்டண வசூல் மையங்கள் ஜூன் 30-ம் தேதி வரை செயல்படாது என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இன்று (ஜூன் 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தாழ்வழுத்த மின்நுகர்வோரின் கவனத்திற்கு!
1. கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது தமிழ்நாடு அரசு ஊரடங்கினை 30.06.2020 வரை சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
2. இதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக முதல்வரால் கடந்த ஜூன் 15 அன்று செய்திக்குறிப்பு எண்-90 வாயிலாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நேற்று (ஜூன் 19) முதல் 30-ம் தேதி வரை சில அத்தியாவசியப் பணிகள் நீங்கலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3. இதைத் தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் வழிகாட்டுதலினாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 25.03.2020 முதல் 14.07.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசித் தேதி உள்ள LT /LTCT மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை 15.07.2020 வரை தாமத மின்கட்டணம் மற்றும் மறுமின் இணைப்புக் கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, மற்றும் 15.07.2020 வரை மின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை மின் கணக்கீட்டுத் தேதி உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர்களுக்கு அதற்கு முந்தைய மாத மின் கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது (அதாவது தாழ்வழுத்த நுகர்வோர்களுக்கு பிப்ரவரி 2020/ LTCT நுகர்வோர்களுக்கு மே 2020 ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையை ஜூன் 2020 மாத மின்கட்டணமாக கணக்கிடப்படும்).
5. தமிழக அரசின் உத்தரவுப்படி வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கியில் இருசால் செய்யும் வசதிகள் இல்லை என்பதனைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தினை கருத்தில் கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மின்கட்டண வசூல் மையங்கள் 30-ம் தேதி வரை செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.
6. மேலும், மின்நுகர்வோர்கள் ஏற்கெனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையதள வழிகளான வலைதள வங்கியியல், தொலைபேசி வங்கியியல், பேமெண்ட் கேட்வே, பிபிபிஎஸ் ஆகியவை மூலம் 30-ம் தேதி வரையுள்ள காலத்தில் மின்கட்டணம் செலுத்தப் பயன்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.