தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் செயல்படுத்தப்படும் என, திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலையிலான ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 20) நடைபெற்றது.
மகளிருக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஸ்கூட்டர்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தமிழகம் முழுவதும் எங்கெங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையோ அங்கு உடனடியாக திறக்க முதல்வர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எங்கெல்லாம் நெல் விளைகிறதோ அங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு என்பது யார் வேண்டுமானாலும் சொல்லலாம். 24 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளோம். இந்தச் சாதனையை நாங்கள்தான் முறியடிப்போம்.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த மூன்று மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் .
'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம், அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்".
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.