தமிழகம்

கரோனா காலத்தில் தா.பாண்டியன் எழுதிய இரு நூல்கள்: ஜூலை முதல் வாரத்தில் வெளியீடு

கே.கே.மகேஷ்

கரோனா பொது முடக்கத்தில் கிடைக்கிற நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட பலரும் பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருப்போம். வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும், இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று பட்டியல் போட்டிருப்பார்கள். ஆனால், அதை எல்லாம் அவர்கள் செய்தார்களோ இல்லையோ, 88 வயதான தா.பாண்டியன் இரண்டு புத்தகங்களை எழுதிவிட்டார்.

ஒன்று, ‘இந்தியாவில் மதங்கள்’, மற்றொன்று, ‘கொரோனாவா முதலாளித்துவமா?’ என்று புத்தகங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

பொதுமுடக்கக் காலத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதால், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளமலைப்பட்டி கிராமத்துக்கு வந்தார் தா.பாண்டியன். அங்குள்ள தனது தோட்டத்திலும், அச்சம்பத்து கிராமத்தில் உள்ள தோழர் ஜீவாவின் வீட்டிலும் இருந்தபடி இந்த நூல்களை எழுதி முடித்திருக்கிறார் தா.பாண்டியன்.

அதில், 'கொரோனாவா முதலாளித்துவமா?' புத்தகம் முழுமையாகத் தயாராகிவிட்டதால், ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று என்சிபிஎச் நிறுவனம் அறிவித்துள்ளது. 'இந்தியாவில் மதங்கள்' புத்தகத்தைக் கையெழுத்துப் பிரதியாகத் தந்திருக்கிறார் தா.பா. புத்தக வடிவமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. முதல் புத்தகம் வெளியான அடுத்த 10 நாட்களில் இதுவும் வெளிவந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT